நாம்தமிழர் கட்சி (நாதக) ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி, புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்த கண்.இளங்கோ தலைமையில், ‘மேதகு நாம் தமிழர் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. நாதகவில் இருந்து விலகியதற்கான காரணத்தைப் பற்றிப் பேசிய கண்.இளங்கோ, நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் திராவிடக் கட்சிகளுக்கு எதிராகச் செயல்படுவதுதான்.
ஆனால், கடந்த சில காலமாக நாதக தலைமை திராவிடக் கட்சிகளுக்கு எதிராகச் செயல்படுவதை விட்டுவிட்டது என்று குற்றம் சாட்டினார். மேலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை, வெறுமனே மேடைகளில் பேசி விமர்சித்தால் மட்டுமே ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நம்புகிறது என்றும், நடைமுறையில் எந்தவிதமான களப்பணியிலும் அக்கறை காட்டுவதில்லை என்றும் கண்.இளங்கோ சாடியுள்ளார்.
இந்த விலகல் மூலம், நாதகவுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேசியக் கட்சிகளுக்கும் திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று என்று கூறி வந்த நாதகவில் இருந்து, அதன் முக்கிய நிர்வாகிகள் புதிய கட்சியைத் தொடங்கியிருப்பது, அக்கட்சியின் செயல்பாடுகளில் உள்ள உள் முரண்பாடுகளை வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
