தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசியபோது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடுமையான பதிலடி கொடுத்தார்.
“நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘பெரிய கட்சி நம்மிடத்தில் வந்துவிட்டது. அங்கே கொடி அசைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளையார் சுழி போட்டாச்சு,’ என்றார். ஆனால், இப்போது பிள்ளையார் சுழி போடவில்லை; வேறு சுழி போடப்பட்டிருக்கிறது. எல்லோரின் முதுகிலும் ஏறி சவாரி செய்யலாம் என்று சிலர் கனவு கண்டார்கள்,” என்று செங்கோட்டையன் விமர்சித்தார். மேலும், “மக்கள் சக்தி விஜய்யைத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர வைப்பார்கள். மக்கள் சக்திக்கு யாராலும் தடை போட முடியாது,” என்று சூளுரைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆண்ட கட்சிகளேதான் ஆள வேண்டுமா? மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கக் கூடாதா? ஏன் விஜய் ஆட்சிக்கு வரக் கூடாது? நல்லாட்சியை கொடுக்கக் கூடிய புதிய முகத்தை மக்கள் தேடிக் கொண்டே இருந்தார்கள்; அந்த முகம் கிடைத்துவிட்டது,” என்று கூறினார்.
அத்துடன், தவெக-விற்கு மிக விரைவிலேயே சின்னம் கிடைக்கப் போகிறது என்றும், “அந்தச் சின்னத்தைப் பார்த்த பிறகுதான் நாடே வியப்படையப் போகிறது; அஞ்சப் போகிறது. ஏனென்றால் இந்தச் சின்னத்தை வெல்வதற்கு இனி தமிழ்நாட்டில் எந்த இயக்கத்தாலும் முடியாது,” என்றும் கூறி புதிய சின்னம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்தார்.
