ஈரோடு மாவட்டம், பெருந்துறைக்கு அருகில் உள்ள தீர்த்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் 60 அறுபது வயதான செங்கோட்டையன். இவருக்கும், கருமாண்டிசெல்லிப்பாளையத்தைச் சேர்ந்த 52 வயதுள்ள விஜயா என்பவருக்கும் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு விஜயா பெருந்துறை கொங்கு நகரில் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையில், செங்கோட்டையன் வேறொரு பெண்ணைத் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், செங்கோட்டையன் தனக்குச் சொந்தமான ஒரு சொத்தை விற்க முயன்றபோது, அதனை வாங்க முன்வந்தவர்கள், முதல் மனைவி விஜயாவிடம் இருந்து ஒப்புதல் கையெழுத்து வாங்கி வர வேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்துச் செங்கோட்டையன் தனது உறவினர்கள் மூலம் விஜயாவைத் தொடர்பு கொண்டு, தன் சொத்தை விற்க உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ஒப்புக்கொள்ளாத விஜயா, தனது ஒப்புதல் தேவையென்றால், தனக்குக் குறிப்பிட்ட ஒரு தொகையைச் செங்கோட்டையன் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

விஜயா கேட்ட தொகை அதிகமாக இருப்பதால், அதனைத் தன்னால் தர முடியாது என்று செங்கோட்டையன் மறுத்துள்ளார். இதையடுத்து, கேட்ட தொகை கிடைத்தால் மட்டுமே சொத்து விற்பனைக்குக் கையெழுத்துப் போடுவேன் என்று விஜயா உறுதியாகக் கூறியுள்ளார். இதனால் விஜயாவின் மீது செங்கோட்டையன் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று மதியம் பெருந்துறை காஞ்சிக்கோவில் சாலை வள்ளலார் வீதிக்கு அருகில் விஜயா நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த செங்கோட்டையன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயாவின் கழுத்தில் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்துப் பெருந்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து, தலைமறைவான செங்கோட்டையனை வலைவீசித் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.