இங்கிலாந்தின் லண்டன் நகரிலிருந்து வெதர்பி என்ற நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறையில் அதிகாரியாகப் பணிபுரிந்தவர் மேகன் கிப்சன் என்பவராவார். இந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதியுடன் மேகன் கிப்சன் தகாத உறவு வைத்திருந்ததாகச் சக ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட புகார்களைச் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு அனுப்பினர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் அவரைப் பிடித்துக் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், அந்தக் கைதிக்குச் சிறைக்குள் ரகசியமாகப் போதைப் பொருட்களையும் சப்ளை செய்த விவரமும் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்துக் காவல்துறையினர் மேகன் கிப்சனை லீட்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது, சிறை அதிகாரியாகப் பணிபுரிந்த மேகன் கிப்சன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டன. அதனால், குற்றவாளியாகக் கருதப்பட்ட மேகன் கிப்சனுக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.