இந்தியாவிற்கு வந்துள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரமாண்டமான இரவு உணவு விருந்தை வழங்கினார். இவ்விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் இரு நாட்டு தூதர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முழுக்க முழுக்க சைவ வகைகளால் அமைந்திருந்த இந்த இரவு உணவின் மெனுவில், சிறப்பு கவனத்தை ஈர்த்தது காஷ்மீர் பிராந்தியத்தின் பாரம்பரிய உணவான‘குச்சி தூன் செடின்’.

இந்த உணவு மிக உயர்ந்த விலையுள்ள குச்சி  காளான்கள் மூலம் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவை சந்தையில் ஒரு கிலோவுக்கு ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை விலையில் விற்கப்படுகின்றன. மிக அரிதாக கிடைப்பதால் சில நேரங்களில் விலை ரூ.50,000 ஐ கூடத் தாண்டுகிறது.

ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய இமயமலைப் பிரதேசங்களில் மட்டுமே வளரும் இந்த காளான்கள், பனி உருகிய பின் வசந்த காலத்தில் இயற்கையாக முளைக்கும். சில நேரங்களில் காட்டுத்தீக்குப் பிறகும் இவை மேம்பட்டு வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மலைப்பகுதிகளின் கடினமான நிலப்பரப்பில் பல வாரங்கள் பயணம் செய்து உள்ளூர்வாசிகள் இக்காளான்களை சேகரிப்பது மிகவும் சவாலான பணியாகும். மேலும் குச்சி புலாவ், யக்னி, ரோகன் ஜோஷ் போன்ற பாரம்பரிய காஷ்மீரி உணவுகளிலும் இந்த அரிய காளான் பயன்படுத்தப்படுகிறது.