உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டம், சதர் பஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மோகன் சிங் என்பவர் வசித்து வந்தார். பீடி குடிப்பதற்காகத் தனது குடும்பத்தாரிடம் அவர் தீப்பெட்டி கேட்டுள்ளார். ஆனால், குடும்பத்தினர் தீப்பெட்டி கொடுக்க மறுத்ததால், மோகன் சிங் கோபமடைந்து கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவரின் சகோதரர் ஷியாம் கூறுகையில், “நாங்கள் படுத்துக்கொண்டிருந்தபோது அவர் வந்து தீப்பெட்டி கேட்டார்.

நாங்கள் கொடுக்காமல் அவரைத் திட்டினோம். இதனால், ஆத்திரமடைந்தவர் வெளியே சென்று கதவைப் பூட்டிவிட்டு, கிணற்றில் குதித்துவிட்டார்” என்று தெரிவித்தார். மோகன் சிங் வண்ணப் பூச்சுப் பணி செய்து வந்தவர் என்றும், அவருக்குக் குடிப்பழக்கம் உண்டு என்றும் கூறப்படுகிறது. மேலும், அவர் கிணற்றுக்கு அருகில் நின்று ‘ஜெய் பஜ்ரங்பலி’ என்று கூறியபடியே கிணற்றில் குதித்ததாக அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, நகர காவல் வட்ட அலுவலர் லட்சுமிகாந்த் கௌதம் வெளியிட்ட அறிக்கையில், “சதர் பஜார் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த மோகன் சிங் என்பவர் கிணற்றில் குதித்ததாக தகவல் கிடைத்தது. உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மோகன் சிங்கிற்கு குடிப்பழக்கம் இருந்தது என்றும், அன்றைய தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவரை, அவரது குடும்பத்தினர் குடிக்கக் கூடாது என்று அறிவுரை கூறியதால் ஆத்திரத்தில் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார் என்றும் தெரியவந்துள்ளது. உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். குடிப்பழக்கத்தால் தற்கொலைகள் மற்றும் குடும்பப் பிரச்சினைகள் அதிகரிப்பது குறித்து சமூகத்தில் கவலைகள் எழுந்துள்ளன.