இண்டிகோ விமானங்கள் நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டதால் பயணத் திட்டங்கள் சீர்குலைந்த நிலையில், கர்நாடகாவின் ஹூப்பள்ளியில் புதுமணத் தம்பதிகள் தங்கள் சொந்த திருமண வரவேற்பில் நேரில் அல்லாமல் வீடியோ காலில் கலந்து கொண்ட அதிரடியான சம்பவம் நடந்துள்ளது. ஹூப்பள்ளியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் மேதா க்ஷிர்சாகரும், புவனேஸ்வரைச் சேர்ந்த சங்கம தாஸும், நவம்பர் 23 அன்று புவனேஸ்வரில் திருமணம் செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து டிசம்பர் 3 அன்று ஹூப்பள்ளி குஜராத் பவனில் நடைபெறும் வரவேற்பு விழாவிற்கு, புவனேஸ்வர்–பெங்களூரு–ஹூப்பள்ளி என இரு கட்ட விமானப் பயணத்தை முன்பதிவு செய்திருந்தனர்.

ஆனால், விமானி பற்றாக்குறை மற்றும் புதிய FDTL (Flight Duty Time Limit) விதிமுறைகளை செயல்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாக, இண்டிகோ பல்வேறு விமானங்களை திடீர் ரத்து செய்தது. மேதா–சங்கம தம்பதிகள் பயணிக்க இருந்த டிசம்பர் 2 விமானங்கள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியில் டிசம்பர் 3 அதிகாலை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது.

 

 

View this post on Instagram

 

A post shared by The Now India (@thenowindia)

ஏற்கனவே இடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது; உறவினர்கள், விருந்தினர்கள் கூடிவிட்டனர். கடைசி நேரத்தில் நிகழ்வை ரத்து செய்ய இயலாத சூழ்நிலையில், மணமகளின் பெற்றோர் விரைவான முடிவு எடுத்தனர். சடங்குகளின் மரபைத் தொடர, மேடையில் மணமகன்–மணமகள் இருக்கைகளில் பெற்றோர்களே அமர்ந்தனர். இதேசமயம் புதுமணத் தம்பதிகள் புவனேஸ்வரில் இருந்து தங்கள் திருமண ஆடையுடன் நேரலையில் வீடியோ அழைப்பின் மூலம் விழாவில் இணைந்தனர்.

“அவர்கள் வந்து சேருவார்கள் என்று கடைசி நிமிடம் வரை நாங்கள் நம்பினோம். ஆனால் அதிகாலை 4 மணிக்கு விமானம் ரத்து செய்ததாக வந்த செய்தியால் வேறு வழியின்றி இந்த ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது,” என மணமகளின் தாய் கூறினார். “ஏற்கனவே பல விருந்தினர்கள் வந்துவிட்டதால், நிகழ்வை மாற்ற முடியாத நிலை. அதனால் ஆன்லைனில் தம்பதியரை திரையில் காண்பித்தோம்,” என்று அவர் தெரிவித்தார்.

புவனேஸ்வர்–மும்பை–ஹூப்பள்ளி போன்ற இணைப்பு வழித்தடங்களில் பயணித்த பலர் கூட இதேபோன்ற விமான ரத்துகளால் பாதிக்கப்பட்டனர். மேலும் இண்டிகோ விமான பிரச்சனை தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.