கொசு விரட்டி சுருள்களை வீடுகளில் பயன்படுத்தும் பழக்கம் ஒருகாலத்தில் அதிகமாக இருந்தது. தற்போது பல்வேறு எலக்ட்ரிக் மற்றும் திரவ கொசு விரட்டிகள் வந்ததால் அதன் பயன்பாடு குறைந்துவிட்டது. இப்படியிருக்க, ஒரு நபர் கொசு சுருளை கொதிக்கும் நீரில் போட்டு நடத்திய பரிசோதனை குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி, பயனர்கள் ஆச்சரியத்திலும், விமர்சனத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

இரண்டு நிமிடம் 38 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில், அந்த நபர் ஒரு கொசு சுருளை கொதிக்கும் நீரில் போட்டு, அது முழுவதும் கரையும் வரை காத்திருக்கிறார். அதன் பிறகு கிராம்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களைச் சேர்த்து, பின்னர் வைரஸ் மற்றும் பேக்டீரியாக்களை அழிக்கும் என்று கூறப்படும் சில வேதிப்பொருள் கலவைகளையும் இணைக்கிறார். இறுதியில் பூச்சிகள், வைரஸ்கள், பேக்டீரியாக்களை அழிக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படும் விசித்திரமான ஒரு கரைசலை உருவாக்கியதாக வீடியோவில் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த வீடியோ முதலில் எக்சில் @_fitnesshub என்ற கணக்கில் “கொதிக்கும் நீரில் கொசு சுருளைப் போட்டால் என்ன நடக்கும் என்பதைப் பாருங்கள்” என்ற வாசகத்துடன் பகிரப்பட்டது. இதுவரை இது 4.69 இலட்சத்திற்கும் மேல் பார்வையிடப்பட்டு, பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. பல பயனர்கள் இது போன்ற செயல்களை வீட்டில் முயற்சிக்கும் முன் அதற்கான அபாயங்களை உணரச் சொல்லியுள்ளனர். ஒரு பயனர், “இந்த வீடியோ என் நேரத்தை வீணடித்தது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மற்றொருவர், “இதை வீட்டில் முயற்சி செய்யவேண்டாம்” என எச்சரித்துள்ளார்.
ஒருவர் நகைச்சுவையாக, “இந்த சூப்பை குடித்துவிட்டால், இனி ஒருபோதும் கொசு கடிக்காது!” எனப் பதிவிட்டுள்ளார். அதே நேரம் மற்றொரு பயனர், “இது கொசுக்களைக் கொல்லுமா அல்லது மனிதர்களைக் கொல்லுமா?” என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இந்த பரிசோதனை ஏன், எந்த நோக்கத்திற்காக செய்யப்பட்டது என்பது குறித்து இணையத்தில் விவாதம் வெகுவாக எழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.