நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த பிரவீன் (22) என்ற டிப்ளமோ முடித்த தனியார் ஊழியர், ஒரே நேரத்தில் இரு பெண்களுடன் தொடர்பில் இருந்த நிலையில், இருவருக்கும் குழந்தை பிறந்த அதிர்ச்சிச் சம்பவம் நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பணிபுரிந்த பிரவீன், ஊட்டியிலுள்ள 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலில் இருந்துள்ளார். இருவருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்பட்டுப் பிரிந்த நிலையில், இந்தச் சமயத்தில் ஊட்டியில் கல்லூரி மாணவி ஒருவருடனும் பிரவீனுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் பள்ளி மாணவியுடன் சேர்ந்த பிரவீன், ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது.

பின்னர், பள்ளி மாணவியுடன் ஏற்பட்ட தகராறால், பிரவீன் அவருடன் பிரிந்து, கல்லூரி மாணவியுடன் நெருங்கிப் பழகி வந்தார். இதில், கல்லூரி மாணவி கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. கல்லூரி மாணவி 18 வயது நிரம்பியவராக இருந்ததால், அவரது வீட்டாருக்குத் தெரியாமல் பிரவீன் அவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்தச் சூழலில், கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி பள்ளி மாணவிக்குத் திடீரென வயிற்று வலி ஏற்படவே, அவரது தாய் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்குக் குழந்தை பிறந்ததைக் கண்ட டாக்டர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கும், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

ஊட்டி அனைத்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், டிப்ளமோ முடித்த பிரவீன் 15 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கியது உறுதியானது. இதனையடுத்து, பிரவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், பள்ளி மாணவி மற்றும் கல்லூரி மாணவியின் குடும்பத்தினர், இரண்டு கைக்குழந்தைகளுடன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.