ஹரியானாவின் குருகிராம் நகரில் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று, மனிதநேயம் இன்னும் மங்கவில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. சுபாஷ் சௌக் பகுதியில் முட்டை வியாபாரம் செய்யும் ஒரு கடைக்காரரைச் சில உள்ளூர் ரவுடிகள்  மிரட்டி, அவர் விற்ற முட்டைகளுக்குப் பணம் கொடுக்க மறுத்துள்ளனர்.

வியாபாரி தைரியமாகப் பணம் கேட்டபோது, ஆத்திரமடைந்த அந்தக் குண்டர்கள் அவரது வண்டியை சேதப்படுத்த முயன்றதுடன், முட்டைகளையும் தரையில் வீசி உடைத்துச் சென்றனர். இதனால் மனமுடைந்த வியாபாரி, “நான் யாரிடம் போய்ப் புகார் செய்வது?” என்று கலங்கி நின்றார்.

இதைக் கண்ட அவ்வழியே சென்ற ஒருவர், உடைந்த முட்டைகள் சிதறிக் கிடந்த வண்டியின் புகைப்படத்தை எடுத்து, வியாபாரியின் QR குறியீடு தெரியும்படி, ‘ரெடிட்’ சமூக ஊடகத்தில் ‘குர்கானின் குண்டாஸ்’ என்ற தலைப்பில் பதிவேற்றம் செய்தார்.

The goons of gurgaon
byu/Successful-Wrap-2382 ingurgaon

அந்தப் பதிவு சில மணி நேரங்களிலேயே வைரலாகப் பரவியது. வியாபாரியின் துயரத்தைப் படித்த மக்கள், உடனடியாக உதவ முன்வந்தனர். சிலர் ₹1000, சிலர் ₹500, இன்னும் சிலர் ₹20 அல்லது ₹50 எனத் தங்களால் முடிந்த தொகையை, படத்தில் இருந்த QR குறியீடு வழியாக அனுப்பினர்.

பலரும் தாங்கள் அனுப்பிய கட்டணத்தின் ஸ்கிரீன் ஷாட்களை கமெண்ட்களில் பகிர்ந்து, மற்றவர்களையும் உதவத் தூண்டினர். சமூக ஊடகத்தின் மூலம் கிடைத்த இந்த அபரிமிதமான ஆதரவால், சிறு வியாபாரிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை விட அதிக தொகையை அவர் மீட்டெடுத்தார். இந்த சம்பவம், நகரத்தின் கூட்ட நெரிசலிலும் மனிதநேயமும் இரக்கமும் உயிர்ப்புடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்ததுடன், அந்நியர்கள் கூட நம்பிக்கையின் ஒளியைக் கொடுக்க முடியும் என்பதைக் காட்டியது.

இதுவே உண்மையான மனிதநேயத்தின் சாரம் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்துத் தெரிவித்தனர்