பெங்களூரு ஆந்திரஹள்ளி அருகே காமிகன்யா நகரில் வசித்து வந்த அபிஷேக் மற்றும் அமுல்யா (23) ஆகியோருக்கும் கடந்த சில ஆண்டுகளாக காதல் தொடர்பு இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, காமிகன்யா நகரில் வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளனர்.
இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அமுல்யா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து விரைந்த பேடரஹள்ளி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, அமுல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் அமுல்யாவின் பெற்றோர், “எங்கள் மகள் உயிரிழப்புக்கு அபிஷேக் தான் காரணம்” என்று குற்றம்சாட்டி பேடரஹள்ளி போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
