டாடா குழுமத்தின் முக்கிய முகங்களிலொன்றாக விளங்கிய சிமோன் டாடா (95) வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். இவர் நோயல் டாடாவின் தாயாரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் மாற்றாந்தாயுமானார். சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், துபாயில் சிகிச்சை பெற்ற பின்னர் ஆகஸ்ட் மாதம் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் சிமோன் நேவல் டுனோயர் என்ற பெயரில் பிறந்த அவர், 1953-ல் சுற்றுலாவாக இந்தியா வந்தார். 1955-ல் நேவல் எச். டாடாவை மணந்தார். 1960-களில் டாடா குழுமத்துடனான அவரது தொழில்முறை பயணம் தொடங்கியது. 1961-ல் லக்மே நிறுவன இயக்குநர் குழுவில் இணைந்த அவர், இந்தியப் பெண்களுக்கான உள்ளூர் அழகுசாதனப் பொருட்களின் தேவையை முன்னறிந்து, லக்மேவை தேசிய பிராண்டாக மாற்றினார். 1982-ல் அவர் லக்மே நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் “இந்தியாவின் அழகுசாதனப் சாரினா” எனப் பெயர் பெற்றார்.

1990களில் வெளிவந்த திறந்த பொருளாதார நெறியால், லக்மே–HUL 50:50 கூட்டு முயற்சியாக ‘லக்மே யூனிலீவர்’ உருவாகியது. பின்னர் லக்மே தனது பிராண்டுகளை HUL-க்கு விற்று, 1998-ல் உள்நாட்டு ஆடை சில்லறை துறைக்கு மாறியது. இந்த மாற்றமே பின்னர் டிரென்ட் லிமிடெட் மற்றும் வெஸ்ட்சைடு சில்லறை சங்கிலிகளுக்கான அடித்தளமாக அமைந்தது.

மேலும் சிமோன் டாடா, சர் ரத்தன் டாடா அறக்கட்டளை உட்பட பல தொண்டு நிறுவனங்களிலும் முக்கிய பங்காற்றினார். அவரது மறைவு வணிகத் துறையிலும், டாடா குழுமத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.