டெல்லியைச் சேர்ந்த ஒருவர், செயற்கை நுண்ணறிவுத் தளமான ‘சாட்ஜிபிடி’ உதவியுடன், ஒரு மோசடி ஆசாமியை மிக லாவகமாக ஏமாற்றி, அவர் மன்னிப்புக் கோரும்படி செய்த நாடகீய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது. தனது கல்லூரி மூத்த அதிகாரி போல் நடித்து, அதிக விலை கொண்ட வீட்டு உபயோகப் பொருட்களைக் குறைந்த விலைக்கு விற்பதாகச் சொல்லி அந்த நபர் மோசடி செய்ய முயன்றுள்ளார்.

இது மோசடி என்பதை அறிந்த இளைஞர், அந்த ஆசாமியின் நடவடிக்கைகளைக் கண்டுபிடிக்க ஒரு திட்டம் தீட்டினார். மோசடி ஆசாமி பணம் செலுத்தும்படி QR குறியீட்டை அனுப்பியபோது, அந்த இளைஞர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதாகச் சொல்லித் தாமதித்துள்ளார். இதையடுத்து, டெல்லி இளைஞர் சாட்ஜிபிடியின் உதவியுடன், ஒரு எளிய, ஆனால் செயல்படும் திறன் கொண்ட இணையப் பக்கத்தை உருவாக்கினார்.

இந்த இணையப் பக்கம், அதைப் பயன்படுத்துபவரின் GPS இருப்பிட விவரங்கள் மற்றும் சாதனத்தின் முன்பக்க கேமரா மூலம் ஒரு புகைப்படத்தையும் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த ட்ராகர் பக்கத்திற்கான இணைப்பை மோசடி ஆசாமிக்கு அனுப்பிய இளைஞர், QR குறியீட்டை இதில் பதிவேற்றினால் பணம் செலுத்தும் செயல்முறை விரைவாகும் எனக் கூறி அவரை நம்ப வைத்தார். பேராசையால் உந்தப்பட்ட மோசடி ஆசாமி அந்த இணைப்பைக் கிளிக் செய்தபோது, அந்தப் பக்கம் அவரது சரியான GPS இருப்பிட விவரங்கள், IP முகவரி மற்றும் முகத்தின் தெளிவான புகைப்படம் ஆகியவற்றை உடனடியாகக் கைப்பற்றியது.

பிறகு, தனது புகைப்படத்தையும் இருப்பிட விவரங்களையும் மோசடி ஆசாமிக்கு அனுப்பியதும், அதிர்ச்சியில் உறைந்த அவர், உடனடியாக பயத்தில் மன்னிப்பு கேட்டு, தனது மோசடி நடவடிக்கைகளை நிறுத்துவதாக உறுதியளித்து தொடர் குறுஞ்செய்திகளை அனுப்பினார். இந்தச் சம்பவத்தின் திரைப்படக் காட்சிகளைப் போன்ற அனுபவத்தை அந்த இளைஞர் ரெடிட் தளத்தில் (Reddit) பகிர்ந்துள்ளார்.