ஹரியானா மாநிலம், பானிபட் மாவட்டத்தில் உள்ள நௌல்தா கிராமத்தில் திங்கள்கிழமை கொலையான நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆறு வயது சிறுமி விதியை, அவரது அத்தையே கொன்றது விசாரணையில் அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் புதன்கிழமை தெரிவித்த தகவலின்படி, சிறுமி அழகாக இருந்த ஒரே காரணத்திற்காகவே அவரது அத்தை இந்தப் படுகொலையைச் செய்துள்ளார். விதியை கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டவர், சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த பூனம் ஆவார்.

இவர் ஒரு “மனநல கொலையாளி” எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. கைதான பிறகு, பூனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேலும் மூன்று குழந்தைகளைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். ஆனால், அந்தக் குற்றங்கள் யாவும் விபத்து மரணங்கள் என்று குடும்பத்தினர் கருதியதால், இதுவரை வெளியில் தெரியாமல் இருந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுமி விதியின் தந்தை சந்தீப்பும், குற்றவாளி பூனமின் கணவர் நவீனும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 1ஆம் தேதி தங்கள் வீட்டில் திருமண விழா நடந்தபோது, அனைவரும் வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து, மாடிக்குச் சென்ற விதியை பின் தொடர்ந்து சென்று, அங்குள்ள சேமிப்புக் கிடங்கிற்கு வெளியே இருந்த பிளாஸ்டிக் தொட்டியில் விதியை மூழ்கடித்துக் கொன்றதாகப் பூனம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

காவல்துறை கண்காணிப்பாளர் பூபேந்தர் சிங் பேசுகையில், “விசாரணையில், பூனம் அழகான பெண்களைப் பார்த்தால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதனாலேயே இந்தத் தொடர் குற்றங்களைச் செய்ததாகவும்” தெரிவித்தார். இவர் ஜனவரி 2023-ல் தனது நாத்தனாரின் ஒன்பது வயது மகள் இஷிகாவையும், பின்னர் சந்தேகம் வராமல் இருக்க தன்னுடைய மூன்று வயது மகன் சுபம் மற்றும் ஆகஸ்ட் 2025-ல் உறவினரின் ஆறு வயது மகள் ஜியா ஆகியோரையும் தண்ணீர்த் தொட்டியில் மூழ்கடித்துக் கொன்றதாகத் தெரிவித்துள்ளார். குற்றவாளி பூனமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.