மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனில், 3 மற்றும் 4 வயதுடைய இரண்டு சிறுவர்களை அவர்கள் தாயே பேருந்து நிலையத்தில் கைவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகளைக் கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவதால் நெட்டிசன்கள் கவலை மற்றும் பரிதாபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தேவாஸ் கேட் பேருந்து நிலையத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. குளிரான திங்கட்கிழமை காலை, இரண்டு சிறுவர்களும் நடுங்கிக்கொண்டிருப்பதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக டயல் 112-ஐ அழைத்து புகார் செய்தனர். பின்னர் போலீசார் குழந்தைகளை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில், குழந்தைகள் எங்கு வசிக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது என் அம்மாவுடன் என்று பதில் அளித்துள்ளனர். தாயார் எங்கே சென்றார் என்று கேட்டதற்கு, “மது அருந்த” என கூறியதில், தாயார் குடிப்பழக்கம் கொண்டவர் என சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி தேவாஸ் கேட் டிஐ அனிலா பராஷர் தெரிவித்ததாவது:
காலை 7.45 மணியளவில், இரண்டு குழந்தைகள் தாயாரால் கைவிடப்பட்டதாக தகவல் கிடைத்தது.
டயல் 112-ல் பணியாற்றும் ஓட்டுநர் விகாஸ் பாட்டி, கான்ஸ்டபிள் தருண் தண்டோதியா ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று, அருகிலிருந்தவர்களிடம் விசாரித்தனர்.

 

அதன்படி 3 வயது கன்ஹாய், 2 வயது சகோதரர் காளி ஆகியோர் மீட்கப்பட்டனர். இருவரும் போலீசாரால் காவல் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டனர். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த குழந்தைகளின் உடைகள் மாற்றி அணிவிக்கப்பட்டன. பின்னர் சைல்டு லைன் அமைப்புக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உஜ்ஜைன் தேவாஸ் கேட் பகுதியில் தாயார் வசிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதால், பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புறம் முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகள் பரிசோதிக்கப்பட்டு, குழந்தைகளை விட்டுச் சென்ற பெண் எங்கு சென்றார் என்பதை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பி மாநிலத்திலே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.