நடிகர் மம்மூட்டி நடித்துள்ள ‘களம் காவல்’ திரைப்படம் வரும் டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விநாயகன், பொது வெளியில் எப்படிப் பேசுவது என்பது தனக்குத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் ‘திமிரு’, ‘ஜெயிலர்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள விநாயகன், அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கியவர். இதுபற்றிப் பேசிய அவர், தனக்கு ஆர்வம் இருந்தாலும், மக்களின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தோ, பொதுவெளியிலோ பேசும்போது தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போவதாகவும், யாராவது தேவையில்லாத கேள்விகளைக் கேட்டால் கோபமாக்கி விடுவதாகவும் தெரிவித்தார். இதனால், “நான் என்ன பேசுகிறேன் என்று தெரியாமல் பேசிவிடுகிறேன். அதனால்தான் பொதுவெளிக்கு வருவதைத் தவிர்த்துவிட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.

‘களம் காவல்’ திரைப்படத்தில் மம்மூட்டிக்கு இணையான வேடத்தில் நடித்திருப்பது தனது வாழ்நாள் அதிர்ஷ்டம் என்றும், இந்தக் கதாபாத்திரத்திற்கு மம்மூட்டியே தனது பெயரைப் பரிந்துரைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் விநாயகன் தெரிவித்தார். மேலும், மம்மூட்டியுடன் நடித்தது மிகவும் எளிதாக இருந்தது என்றும், வசனங்களில் அவர் நிறைய உதவினார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

இந்த அனுபவம் குறித்துப் பேசிய விநாயகன், “சத்தமாக நடிப்பது ரொம்பச் சுலபம். நிதானமாக நடிப்பது கஷ்டம். இயக்குநர் ஜிதின் ஜோஸ் என் கை, கால்களைக் கட்டிப்போட்டு, ‘நீங்க எதுவும் செய்ய வேண்டிய தில்லை. நான் சொன்னதைச் செய்தால் போதும்’ என்று சொல்லி என்னை நடிக்க வைத்தது போலத் தோன்றியது” என்றும் அவர் கூறினார்.