இத்தாலியின் வின்சென்சா நகரத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் 53 ஆண்டுகளாக தான் முற்றிலும் பார்வையற்றவர் என்று அரசாங்கத்தை ஏமாற்றி வந்த அதிர்ச்சி அளிக்கும் செய்தி சமீபத்தில் வெளியாகி உள்ளது. வேலை சம்பந்தப்பட்ட விபத்தில் காயமடைந்ததையடுத்து, தன்னை பார்வையற்றவராக அரசாங்க பதிவுகளில் பதிவு செய்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு மில்லியன் யூரோக்களுக்கு மேல் ஊனமுற்றோர் சலுகைகளைப் பெற்றுள்ளார்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக யாருக்கும் சந்தேகம் வராத நிலையில், சமீபத்தில் போலீசாருக்கு இவர் மீது சந்தேகம் வந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் அவரை இரண்டு மாதங்களாக கண்காணித்தபோது, அவர் தனது தோட்டத்தில் சாதாரணமாக வேலை செய்வது, பொருட்களை வாங்குவது, தனியாக கடைக்குச் செல்வது போன்ற காட்சிகள் வீடியோவில் பதிவாயின. இந்த ஆதாரங்கள் அவரது கூற்று முற்றிலும் பொய் என்பதை உறுதிப்படுத்தியது.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில், வின்சென்சா வழக்கறிஞர் அலுவலகம் அவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து, அவரது அனைத்து சலுகைகளையும் உடனடியாக நிறுத்தியுள்ளது. மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் பொய்யான சாக்குப்போக்குகளின் கீழ் பெற்ற சுமார் 200,000 யூரோ வருமானத்திற்கான வரி உத்தரவையும் வரித் துறை பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவம், அரசாங்கத்தின் நிர்வாக அமைப்புகளில் உள்ள குறைபாடுகளை உணர்த்துவதுடன், பொய்யான சலுகைகள் உண்மையிலேயே தேவைப்படுபவர்களைப் சென்றடையாமல் தடுக்கிறது என்பதையும் காட்டுகிறது. இருப்பினும், எத்தனை காலம் ஆனாலும் பொய்கள் ஒருநாள் வெளிவரும் என்பதற்கு இத்தாலியில் நடந்த இந்த சம்பவம் ஒரு சான்றாகும்.
