உத்தரப் பிரதேச மாநிலம், ஔரையா மாவட்டத்தில் 42 வயதுடைய பெண் ஒருவர் பானி பூரி சாப்பிடுவதற்காக வாயைத் திறந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது தாடை விலகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திபியாபூர் பகுதியைச் சேர்ந்த இன்கலா தேவி என்ற அந்தப் பெண், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு வாயை மூட முடியாமல் உடனடியாக மருத்துவ உதவி நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவரது உறவினர்களின் கூற்றுப்படி, அவர் பானி பூரி சாப்பிட வாயைத் திறந்தபோது, அவரது தாடை திடீரென விலகி அங்கேயே ஸ்தம்பித்துவிட்டது. முதலில் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இன்கலா தேவிக்கு, மருத்துவர்கள் மனோஜ் குமார் மற்றும் சத்ருகன் சிங் ஆகியோர் தாடையை மீண்டும் அதன் இடத்திற்குக் கொண்டு வர முயற்சித்தனர், ஆனால் வெற்றி பெறவில்லை.
இதனையடுத்து, அவர் சிறப்புச் சிகிச்சைக்காகச் சிச்சோலி மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டார். மருத்துவர் சத்ருகன் சிங் கூறுகையில், அவர் அதிகமாக வாயைத் திறந்ததால் தாடை விலகி இருக்கலாம் என்றும், இது போன்ற நிலை சாப்பிடும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படலாம் என்றும் கூறினார்.
