தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதிமுக கட்சியில் மீண்டும் பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும் என வலியுறுத்தியதோடு எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் கெடு விதித்திருந்ததால் செங்கோட்டையனை அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார் இபிஎஸ். இதன் காரணமாக தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய் கட்சியில் இணைந்த செங்கோட்டையன் கண்டிப்பாக விஜய் தான் அடுத்த முதல்வர் என்றும் விஜயை அரியணையில் ஏற்றுவதற்காக அனைத்து முயற்சிகளையும் நான் செய்வேன் என்றும் உறுதுணையாக இருப்பேன் என்றும் கூறினார்.

தன்னுடைய கட்சி அலுவலகத்திலும் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் புகைப்படங்களை பயன்படுத்தி வரும் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தொடர்ந்து மக்களை சந்தித்து வரும் செங்கோட்டையன் தலைமையில் புதிய உறுப்பினர்கள் மற்றும் மாற்றுக் கட்சியில் இருப்பவர்கள் விஜய் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.

அந்த வகையில் கோபியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்த அபிஷேக் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.