பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாவட்டத் தலைமையகத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில், 36 வயதான விதவை மற்றும் அவரது 18 வயது மகள் ஆகியோரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 3  இளைஞர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களான பாதிக்கப்பட்டவர்கள், என்.ஆர்.ஐ. ஒருவருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் வாடகைக்கு வசித்துவந்த நிலையில், நவம்பர் 23 மற்றும் 24-ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், தனிமையில் இருந்த அவர்களின் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த நான்கு இளைஞர்கள், மகளின் கணவரையும் ஐந்து மாதக் குழந்தையையும் தனி அறையில் பூட்டிவிட்டு, தாயையும் மகளையும் மற்றொரு அறைக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவர்களிடமிருந்த விலையுயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சாஜன் (19), அர்ஷ்பிரீத் சிங் (18), மற்றும் ராக்கி ஆகிய மூவரை சனிக்கிழமை காலை கைது செய்ததாகவும், ராஜன் (18) என்ற மற்றொரு கூட்டாளி தலைமறைவாக உள்ளதாகவும் ஜலந்தர் கிராமப்புற  காவல் கண்காணிப்பாளர் ஹர்விந்தர் சிங் விர்க் தெரிவித்தார்.

நவம்பர் 24-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, சம்பவ இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில் மூன்று குற்றவாளிகளையும் கைது செய்தது.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் ஏற்கெனவே கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், நவம்பர் 22-ஆம் தேதி ஜலந்தர் நகரில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த 10 நாட்களுக்குள் இந்த இரண்டாவது கடுமையான குற்றச் சம்பவம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.