தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகேயுள்ள மேலகடம்பா பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி எழில் மோகன் (24), தனது நண்பருடன் கல்லம்பாறை மதகில் குளிக்கச் சென்றபோது, அவரது பைக் வேகமாகச் சென்றதில் சாலையில் தேங்கியிருந்த மழை நீர், அங்குக் குழுமியிருந்த நபர்கள் மீது தெறித்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் எழில் மோகனைத் திட்டியுள்ளனர். எழில் மோகன் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டும், அவர்கள் கேட்காமல் அவரைத் தாக்கியுள்ளனர். அப்போது முத்துசூர்யா என்பவர் மறைத்து வைத்திருந்த வாளால் எழில் மோகனின் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு, அனைவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இந்தத் தகவலறிந்த எழில் மோகனின் சகோதரர்கள் அவரை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முதற்கட்டமாக, கைது செய்யப்பட்ட 17 வயது இளஞ்சிறார், தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார். மேலும், இந்தக் கொலையில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளிகளான முத்துசூர்யா, கோபி, காளிராஜ், பேச்சிராஜ், சுபாஷ்கர் ஆகிய 5 பேரையும் போலீசார் தற்போது வலைவீசித் தேடி வருகின்றனர்.