மத்தியப் பிரதேசத்தின் ராய்சன் மாவட்டத்தில் ஆறு வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த சல்மான் என்ற நபர், 144 மணி நேரத் தீவிரத் தேடலுக்குப் பிறகு வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். இவனைக் பிடிக்க ரூ. 30,000 சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. தலைநகர் போபாலில் உள்ள காந்தி நகர் பகுதியில் ஒரு தேநீர் கடையில் இவன் கைது செய்யப்பட்டான். இவன் தலைமறைவாக இருந்தபோது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்த தேநீர்க் கடைக்கு அருகில் உள்ள ஒருவரின் வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்ததும், வாடகைக்கு வீடு தேடியபோது அடையாள அட்டை இல்லாததால் சந்தேகம் ஏற்பட்டு பொதுமக்கள் போலீஸிற்குத் தகவல் அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

காந்தி நகர் போலீஸார் சல்மானை ராய்சனில் உள்ள சுல்தான்கஞ்ச் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்தது. வனப் பகுதியில் வைத்துச் சல்மான் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது, அவனது காலை நோக்கிச் சுட வேண்டிய கட்டாயம் போலீஸுக்கு ஏற்பட்டது. இதில் காயமடைந்த சல்மான், தற்போது ஹமீதியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

நவம்பர் 21-ஆம் தேதி சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை வனப் பகுதிக்கு அழைத்துச் சென்று சல்மான் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். காணாமல் போன சிறுமியைத் தேடியபோதுதான், அவள் சல்மானுடன் கடைசியாகச் சென்றது தெரிய வந்தது. மருத்துவப் பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டு, சிறுமி தற்போது போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். அவளின் உடல்நிலை சீராகி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு நிலவுகிறது. சல்மானுக்கு மரண தண்டனை அல்லது என்கவுன்ட்டர் வேண்டும் என்று கோரி போராட்டங்கள் நடந்தன. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மோகன் யாதவ் உடனடியாக உயர் அதிகாரிகளுடன் அவசரக் கூட்டம் நடத்தினார். குற்றவாளியைக் கைது செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து முதலமைச்சர் தனது அதிருப்தியைத் தெரிவித்தார். இதையடுத்து, ராய்சன் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) பங்கஜ் பாண்டேயை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்து, ஆஷுதோஷ் என்பவரை புதிய எஸ்.பி.யாக நியமிக்க உத்தரவிட்டார்.