தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய வீரர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. மேலும், 12 மாதங்களுக்குள் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆனது இதுவே முதல்முறை.

இந்திய அணி வீரர்கள் வெற்றிக்காக மட்டுமல்ல, தோல்வியைத் தவிர்க்கக்கூட போராடவில்லை என்று அஸ்வின் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக கொல்கத்தா டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் சரியாக ஆட முடியவில்லை என்றும், போட்டியை டிரா செய்யக்கூடப் போராடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வீரர்களிடம் ‘தோற்க மாட்டேன்’ என்ற பிடிவாத குணம் இல்லை என்றும், இது இந்திய அணியின் சுமாரான ஆட்டத்திற்குக் காரணம் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார். அத்துடன், சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டி போன்ற இளம் வீரர்களுக்கு அடுத்தப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா என்ற நம்பிக்கையை அணி நிர்வாகம் கொடுக்கவில்லை என்றும் அவர் குறை கூறியுள்ளார்.

கம்பீர் போன்றவர்கள் வீரர்களுக்குப் போதுமான தன்னம்பிக்கை கொடுத்திருந்தால், அவர்கள் சுயநலமாக விளையாடாமல் போராடியிருப்பார்கள் என்றும் அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளார். ரஞ்சி டிராபியில் சிறப்பாக ஆடும் வீரர்களைக் கவனிக்க வேண்டும் என்றும், ஐபிஎல்-லின் தாக்கம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தெரிவதாகவும், ‘தோற்க மாட்டேன்’ என்ற பிடிவாத குணம் கொண்ட வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.