இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரபல இசையமைப்பாளர் பாலாஷ் முச்சால் ஆகியோரின் திருமணம் கடந்த நவம்பர் 23-ஆம் தேதி மகாராஷ்டிராவின் சாங்லியில் நடைபெறவிருந்தது.

ஆனால், திருமணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக திருமண நிகழ்வுகள் அனைத்தும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.

ஸ்ரீனிவாஸ் மந்தனா நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர் முழுமையாக குணமடைந்த பின்னரே திருமணம் நடைபெறும் என ஸ்மிருதி உறுதியாக தெரிவித்துள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்பட்டது.

தந்தையின் உடல்நலக்குறைவால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் பாலாஷ் முச்சாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனிடையே, திருமண ஒத்திவைப்பு குறித்த செய்திகள் வெளியான சில மணி நேரங்களிலேயே, ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த நிச்சயதார்த்தம் மற்றும் காதலை வெளிப்படுத்திய வீடியோக்கள் உள்ளிட்ட அனைத்து திருமணப் பதிவுகளையும் நீக்கியது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

பாலாஷ் முச்சாலின் சமூக வலைதளப் பக்கங்களில் மட்டும் திருமணப் பதிவுகள் நீக்கப்படாமல் இருக்கும் நிலையில், ஸ்மிருதியின் இந்த அதிரடி நடவடிக்கை பல்வேறு வதந்திகளுக்கு வித்திட்டுள்ளது.

பாலாஷ் முச்சால் வேறு ஒரு பெண்ணுடன் (நடன இயக்குநர்) நெருக்கமாக இருந்ததை ஸ்மிருதி கையும் களவுமாக பிடித்துவிட்டதாகவும், இது தொடர்பாக இரு குடும்பத்தாருக்கும் இடையே பெரும் சண்டை ஏற்பட்டதாகவும், பாலாஷின் தந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவும் நாடகமே என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

மேலும், பாலாஷ் முச்சால் வேறொரு பெண்ணுடன் மே மாதம் நடத்தியதாக கூறப்படும் தனிப்பட்ட உரையாடல் ஸ்க்ரீன்ஷாட்களும் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளன. இதுதொடர்பான செய்திகளை மறைக்க பாலாஷ் தரப்பில் மக்கள் தொடர்பு நிறுவனங்கள் மூலம் விளம்பரங்கள் செய்யப்படுவதாகவும் பேசப்படுகிறது.

எனினும், ஸ்மிருதி மந்தனா அல்லது அவரது குடும்பத்தினர் தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், ஸ்மிருதிக்கு ஆதரவாகவும், தேவையில்லாத புரளிகளை   நிறுத்துமாறும் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.