திருநெல்வேலியில், வீட்டை உடைத்துத் திருட வந்த மர்ம நபர், வீட்டில் ஒரு ரூபாய் கூடப் பணம் இல்லாததால் ஏற்பட்ட விரக்தியில், வீட்டின் உரிமையாளருக்குக் கைப்படக் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் ஒரே நேரத்தில் அதிர்ச்சியையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பழைய பேட்டையைச் சேர்ந்த ஜேம்ஸ் பாண்ட் என்பவர், தனது மகளைப் பார்ப்பதற்காகக் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது இந்தத் திருட்டு முயற்சி நடந்துள்ளது.

உரிமையாளர் இல்லாத நேரத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த திருடன், பீரோ மற்றும் பிற இடங்களை உடைத்துப் பார்த்தபோது, எடுத்துச் செல்ல எந்த நகையோ, பணமோ இல்லை என்பதை அறிந்து விரக்தி அடைந்துள்ளார்.

அதனால், அங்கிருந்த நான்கு பக்கக் கடிதம் ஒன்றில், “வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. அடுத்த தடவை என்னை மாதிரி திருடன் வந்தால் யாரையும் ஏமாற்ற வேண்டாம். காசு வைக்கவும். எதற்கு இத்தனை கேமரா? போங்கடா வெண்ணைகளா…என்னை மன்னித்து விடுங்கள். இப்படிக்கு திருடன்” என்று எழுதி வைத்துள்ளார்.

மேலும், வீட்டில் இருந்த ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உண்டியலை மட்டும் திருடிக் கொண்டு, தான் யார் என்று கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கையும் கழற்றிச் சென்றுள்ளார். இது குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.