கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம் , ஹிரேமுலங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வினி ஹலகட்டி (25). இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஆண் குழந்தை இல்லாத ஏக்கத்தில் 4-வது முறையாகக் கர்ப்பமானார். ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த அஸ்வினிக்கு, கடந்த நவம்பர் 23-ஆம் தேதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் மிகுந்த விரக்தி அடைந்துள்ளார்.
மறுநாள் குழந்தையுடன் வீட்டிற்குத் திரும்பிய அஸ்வினி, நேற்று (நவ. 25) காலையில் தனது தாயார் வெளியே சென்றிருந்தபோது, தான் பெற்ற மகள் என்றும் பாராமல் அந்தக் குழந்தையின் கழுத்தை நெரித்துள்ளார். இதில், பச்சிளங் குழந்தை மூச்சுத்திணறிப் பரிதாபமாக உயிரிழந்தது.

வெளியே சென்றிருந்த அஸ்வினியின் தாய் வீட்டுக்குத் திரும்பியதும், அஸ்வினி, குழந்தை மூச்சுவிடவில்லை என்று கூறி அழுது நாடகமாடி உள்ளார். இதனையடுத்து, குழந்தையை அரசு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் சென்றபோது, மருத்துவர் பரிசோதனை செய்து, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், கழுத்து நெரிக்கப்பட்டதால்தான் மூச்சுத்திணறி இறந்ததாகவும் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மருத்துவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் மருத்துவமனைக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி, அஸ்வினி மற்றும் அவரது தாயிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், தனக்கு 4-வது முறையாகப் பெண் குழந்தை பிறந்த விரக்தியில், தான் பெற்ற குழந்தையையே அஸ்வினி கழுத்தை நெரித்துக் கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொடூரச் செயலை அரங்கேற்றிய அஸ்வினியைக் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
