திராவிடப் பேரழகி’ என்று புகழப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டிப்போட்டிருந்தார்.
புகழின் உச்சத்தில் இருந்த அவர், 1996-ஆம் ஆண்டு திடீரெனத் தற்கொலை செய்துகொண்டது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சில்க் ஸ்மிதாவின் மரணம் குறித்து அவருடன் பல படங்களில் நடித்த நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் ஆனந்தராஜ் பேசுகையில், “சில்க் ஸ்மிதா எனக்கு மிகவும் நல்ல தோழி. என்னுடன் பல படங்களில் நடித்துள்ளார். அவர் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, எனக்கும், அவருக்கும் ஒரு குத்துப்பாட்டு காட்சி படமாக்கப்பட்டது. ஆனால், மறுநாள் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு நான் அதிர்ந்து போனேன்” என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.
மேலும், “அவரது இந்த விபரீத முடிவுக்குக் காரணம் மன அழுத்தம் தான். அவருக்கு மனவலி அதிகம் இருந்தது. அவர் உயிருடன் இருந்திருந்தால், இப்போது வரை நடித்துக்கொண்டிருப்பார்” என்று ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.
