சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் அருகே உள்ள நாராயண்பூர் கிராமத்தில், தனியார் பள்ளி ஒன்றில் 4 வயது சிறுவன் மீது ஆசிரியர்கள் காட்டிய கொடூர நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கல்வித்துறை அதிரடியாக விசாரணை தொடங்கியுள்ளது.

ஹான்ஸ் வாஹினி வித்யா மந்திர் என்ற இந்த பள்ளி நர்சரி முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்படுகிறது. திங்கள்கிழமை காலை, வழக்கம்போல பள்ளி தொடங்கியபோது, நர்சரி வகுப்பில் ஆசிரியர் காஜல் சாஹு மாணவர்களின் வீட்டுப்பாடங்களைச் சரிபார்த்தார். அப்போது வீட்டுப்பாடம் செய்யாத மாணவனை முதலில் வகுப்பிலிருந்து வெளியேற்றிய அவர், பின்னர் மற்றொரு ஆசிரியரின் உதவியுடன் அந்த சிறுவனை சட்டை கயிற்றால் கட்டி, பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் தொங்கவைத்தார்.

சிறுவன் பல மணி நேரம் மரத்திலிருந்து தொங்கியபடி அழுது உதவி கேட்டதாகவும், அதைப் பொருட்படுத்தாமல் ஆசிரியர் அருகில் நின்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த ஒருவர் இந்த நிகழ்வை வீடியோ எடுத்து தடுக்க முயற்சித்தபோதிலும், பின்னர் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவேற்றி வைரலாக்கினார்.

சம்பவம் பெரும் ஆவேசத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வட்டார கல்வி அதிகாரி (BEO) டி.எஸ். லக்ரா உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை மேலதிக நடவடிக்கைக்காக மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என அவர் தெரிவித்தார். மாவட்ட கல்வி அதிகாரி (DEO) அஜய் மிஸ்ராவும் சம்பவம் குறித்து உறுதிப்படுத்தியுள்ளார்.

விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பள்ளி நிர்வாகம் தவறை ஒப்புக்கொண்டு பொதுமன்னிப்பு கேட்டுள்ளது.

குழந்தைக்கு உடல் ரீதியான காயம் எதுவும் இல்லை என்றாலும், உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.