மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் அம்லா கிராமத்தை சேர்ந்த 20 வயதான சவிதா பாரத், கடந்த 19 ஆம் தேதி பிரசவத்திற்காக மொகதா தாலுகா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜவஹர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு குழந்தை பிறந்தது.
நேற்று (நவம்பர் 24) தாய், சேய் இருவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அனுப்பப்பட்ட இவர்களை, கிராமத்திற்கு இன்னும் 2 கிலோமீட்டர் தூரமிருக்கும்போதே ஓட்டுநர் வாகனத்திலிருந்து இறக்கிவிட்டு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
— Naresh Shende (@NareshShen87640) November 24, 2025
இதனால் சவிதா, அவரது தாய், மாமியார் ஆகியோர் குழந்தையுடன் நடந்தே கிராமத்தை நோக்கி சென்றனர். பிரசவித்த ஒரு நாளிலேயே சவிதாவால் நடப்பது கடினமான நிலையில் இருந்ததாகவும், இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த நபர், “புதிய தாய்மார்களை இப்படிச் சாலையில் இறக்கினால், அவர்களுக்கு ஏதாவது ஆனால் பொறுப்பு யார்? குழந்தையை யார் கவனிப்பார்கள்? அரசு பதில் சொல்ல வேண்டும்” என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ வைரலானதால், சம்பவம் மீது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மேலும் இதையடுத்து சுகாதார அலுவலர் டாக்டர் பௌசாஹேப் சத்தார், “ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது; விசாரணைக்கு பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். மேலும் சம்பவம் பற்றி அறிந்ததும் மருத்துவக்குழு சவிதாவின் வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்ததாகவும், தாய்–சேய் இருவரும் நலமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
