வெங்காய விலை வீழ்ச்சியால் அடிப்படை உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவையும் மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால், மத்தியப் பிரதேச விவசாயிகள் அதிரடி போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அதாவது ஒரு கிராமத்தில் வெங்காயத்திற்கு மனிதர் இறுதி சடங்கு செய்யும் வகையில் ‘இறுதிச்சடங்கு’ நடத்தப்பட்ட சம்பவம் பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிராமத்தில் உள்ள தகன மைதானத்தில் ஒரு பாடையில் வெங்காயத்தை குவித்து, அதற்கு பூமாலை அணிவித்து, முறையான இறுதி சடங்கு சடங்குகள் மேற்கொள்ளப்பட்டது. மத்தியப் பிரதேசத்தின் மால்வா மற்றும் நிமர் பகுதிகள் வெங்காய உற்பத்திக்கு முக்கிய மையங்களாக உள்ள நிலையில், சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் இந்த நூதன போராட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கிறதாவது, மண்டிகளில் வெங்காயம் கிலோவுக்கு ₹1 முதல் ₹10 வரை மட்டுமே விலை கிடைக்கிறது. சில இடங்களில் ₹1–2 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். உற்பத்தி செலவையும் விவசாயிகள் மீட்டெடுக்க முடியாமல் போயுள்ளது.

இறுதி சடங்கில் கலந்து கொண்ட விவசாயி பத்ரி லால் தாக்கட் கூறியதாவது:
“நாங்கள் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளோம். நியாயமான விலை கிடைக்காமல் இருப்பதால் இந்த வெங்காய ஊர்வலத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. அரசு இன்னும் விழிக்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்யலாம்?” என்றார்.

மற்றொரு விவசாயி கூறுகையில்,“வெங்காயம் எங்களுக்கு குழந்தையைப் போன்றது. இந்த விவசாயம் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி. கனமழையால் இரண்டாவது பயிரும் சேதமடைந்தது; இப்போது வெங்காயமும் காய்ந்துவிட்டது. அரசு எங்கள் செலவை ஈடுகட்டும் அளவு விலை தர வேண்டும்” என்றார்.

விவசாயிகள் மேலும் குற்றம் சாட்டியது, வெங்காயத்தின் மீது நீண்டகாலமாக விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக இந்தியா சர்வதேச சந்தைகளில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டதாகவும், ஏற்றுமதி குறைந்ததால் உள்நாட்டு இருப்பு அதிகரித்து மண்டியில் விலை மேலும் சரிந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்த போராட்டம் ‘தொடக்கம் மட்டுமே’ என எச்சரித்த அவர்கள், நியாயமான விலை உறுதிப்படுத்தப்படாவிடில் போராட்டங்களை தீவிரப்படுத்துவதாக தெரிவித்தனர்.