மராட்டியத்தை சேர்ந்த பெண் ஒருவர், ஒரு வக்கீலுடன் மூன்று ஆண்டுகள் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இந்தநேரத்தில் வக்கீல் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தாலும், முந்தைய திருமணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் அந்த பெண் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தில் பெண் கர்ப்பமானதாகவும், அதை பின்னர் கலைத்ததாகவும் தகவல்.

பின்னர் அந்த பெண் திருமணத்திற்கு வற்புறுத்தியபோது, வக்கீல் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது போலீசில் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யுமாறு வக்கீல் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்ததால், அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புய்யன் ஆகியோர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது. விசாரணை பிறகு, வக்கீல் மீது தொடரப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் போது, “தோல்வியடைந்த ஆண்–பெண் உறவுகளில், பின்னோக்கிப் பார்த்து பாலியல் வன்முறை சாயம் பூசுவது கவலைக்குரியதும் கண்டனத்துக்குரியதும்” என்று நீதிபதிகள் கடுமையாக தெரிவித்தனர்.

“ஒவ்வொரு கசப்பான உறவையும் கற்பழிப்பு குற்றமாக மாற்றுவது, குற்றத்தின் தீவிரத்தை அற்பமாக்குவதோடு மட்டுமல்லாது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு அழிக்க முடியாத களங்கத்தையும் ஏற்படுத்துகிறது” என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும், “பாலியல் வன்கொடுமை என்பது மிகக் கடுமையான குற்றம்; உண்மையான பாலியல் வன்முறை, கட்டாயம், அல்லது சுதந்திரமான ஒப்புதல் இல்லாத சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்” என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்.

உறவின் போது ஏற்பட்ட உடல் நெருக்கத்தை, பின்னர் அவ்வுறவு திருமணமாக முடியாததால் பாலியல் வன்கொடுமை குற்றமாக முத்திரை குத்தக்கூடாது என்றும், ஆனால் நம்பிக்கை மீறப்பட்ட உண்மையான வழக்குகளுக்கு சட்டம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இத்தகைய உடைந்த உறவுகளுக்கு குற்றச்சாயல் பூசப்படும் கவலையளிக்கும் போக்கு பல வழக்குகளில் கவனிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.