இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான பலாஷ் முச்சலுக்கும் இடையேயான திருமணம் நேற்று முன்தினம் (நவ. 23) நடைபெறவிருந்த நிலையில், இரு தரப்பிலும் ஏற்பட்ட தொடர் உடல்நலக்குறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஸ்மிருதியின் தந்தைக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் திருமணம் முதலில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஸ்மிருதியின் வருங்கால கணவர் பலாஷ் முச்சலுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்ட செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும், கவலையையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவங்களின் பின்னணியில், ஸ்மிருதி தனது திருமணம் தொடர்பான அனைத்து இன்ஸ்டாகிராம் பதிவுகளையும் நீக்கியது இணையத்தில் விவாதங்களை உருவாக்கியது.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்துப் பலாஷ் முச்சலின் சகோதரியான பாடகி பலாக் முச்சல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “ஸ்மிருதியின் தந்தையின் உடல்நிலை காரணமாகவே, ஸ்மிருதி மற்றும் பலாஷின் திருமணம் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான நேரத்தில், எங்களின் தனிப்பட்ட தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அவர் ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.