டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த இந்திய வீரரான கருண் நாயர், ரஞ்சி டிராபி 2025-26 சீசனில் தனது அபாரமான ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி, இந்தியத் தேர்வாளர்களுக்கு அழுத்தமான ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். கர்நாடகா அணிக்காக விளையாடும் கருண் நாயர், இதுவரை இந்த சீசனில் ஆடிய 5 போட்டிகளில் 602 ரன்கள் குவித்து ரன் குவிப்புப் பட்டியலில் முன்னணி வீரர்களில் ஒருவராக உள்ளார்.
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அதற்குப் பதிலளிக்கும் விதமாக உள்ளூர் போட்டிகளில் ரன் வேட்டையைத் தொடங்கியுள்ளார். இந்த சீசனில் அவர் சவுராஷ்டிராவுக்கு எதிராக 73 ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து, கோவாவுக்கு எதிராக 174 ரன்கள் (அவுட் ஆகாமல்) மற்றும் கேரளாவுக்கு எதிராக 233 ரன்கள் என இரண்டு பெரிய சதங்களைப் பதிவு செய்தார்.
இந்த இரட்டைச் சதம் மூலம், முதல் தர கிரிக்கெட்டில் 9,000 ரன்களைக் கடந்த மைல்கல்லையும் அவர் எட்டினார். சாய் சுதர்சன் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்கள் சொதப்பும் நிலையில், கருண் நாயரின் இந்த ரன் குவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
