உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி சுனில் தெவாடியா, பிஜ்னோரில் உள்ள சந்த்பூர் காவல் நிலையப் பகுதியில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் ஒரு சட்டவிரோத தனியார் கிளினிக்கில் சோதனை நடவடிக்கையின்போது கையும் களவுமாகக் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் சங்கீதா ஜெயின் தலைமையிலான இந்தக் குழுவினர், சந்த்பூர் காவல்துறையினருடன் ஞாயிற்றுக்கிழமை சுமார் 1:13 மணியளவில் கிளினிக்கிற்குச் சென்றனர். குழு உள்ளே நுழைந்தபோது, தெவாடியா தனது பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்த அறையில் அமர்ந்திருந்தார். போலீசாரைக் கண்டதும், அவர் உடனடியாக அங்கிருந்த குளியலறைக்குள் ஓடிச் சென்று பூட்டிக்கொண்டார்.

குளியலறைக்குள் பூட்டிக்கொண்ட தலைமை மருத்துவ அதிகாரி தெவாடியாவை, காவல்துறையினர் கதவை உடைத்துவிடுவோம் என்று எச்சரித்த பின்னரே, அவர் பயத்துடன் சுமார் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்தார். அரசு மருத்துவரான தெவாடியா தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோத கிளினிக் நடத்தி, மருத்துவ ஆய்வகத்துடன் சேர்ந்து நோயாளிகளிடம் பணம் வசூலிப்பதாகச் சங்கீதா ஜெயின் குற்றம் சாட்டினார்.

மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்பும் இதுபோலச் செய்தபோது எச்சரித்தும் அவர் மீண்டும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரூ.300 கட்டணம் வசூலித்து 150 நோயாளிகள் வரை அவர் பார்ப்பதாகவும் புகார்கள் வந்தன. இந்தச் சம்பவம் குறித்து துணை முதலமைச்சர் பிரிஜேஷ் பதக் மற்றும் சுகாதாரத் துறைக்கு முறையான புகார் அளிக்கப்படும் என்று சங்கீதா ஜெயின் தெரிவித்தார்.