பெரும்பாலானோருக்குச் சரியான மெத்தை இல்லாமல் தூக்கமே வராது. அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த ஒரு உட்புற வடிவமைப்பாளர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு வீடியோவில், ரூ.7 கோடி மதிப்பிலான ஆடம்பர மெத்தை ஒன்று குறித்துத் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மெத்தை, 1852 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஸ்வீடனைச் சேர்ந்த ‘ஹேஸ்டென்ஸ் மும்பை’ என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டது.
இது ராஜ குடும்பத்தினர் முதல் பிரபலங்கள் வரை பலருக்கும் ஆடம்பரக் கட்டில்களைக் கைவினைத் திறனுடன் தயாரித்து வழங்கும் பிராண்ட் ஆகும். வீடியோவில் இந்த மெத்தை ‘மெத்தைகளின் ரோல்ஸ் ராய்ஸ்’ என்று வர்ணிக்கப்படுகிறது. இந்தச் சொகுசு மெத்தை முழுவதுமாக கையால் வடிவமைக்கப்பட்டது ஆகும். ஒரு மெத்தையை உருவாக்க திறமையான கைவினைஞர்கள் 300 மணி நேரத்திற்கும் அதிகமான நேரத்தைச் செலவிடுகிறார்கள். இதில் உள்ள ஒவ்வொரு அடுக்கிலும் பருத்தி, கம்பளி மற்றும் குதிரையின் முடி ஆகியவை நிரப்பப்பட்டுள்ளன.
மெத்தை உள்ள குதிரை முடிகள் வெறும் அலங்காரத்திற்காக அல்ல, மாறாக அவை இயற்கை நீரூற்றுகள் போல் செயல்பட்டு, காற்றை உள்ளே அனுமதிப்பதால், மெத்தைக்குள் வெப்பம் தங்காமல் பார்த்துக்கொள்கிறது என்று வடிவமைப்பாளர் விளக்கினார். இதனால், தூங்கி எழும்போது வியர்க்காது. மேலும், இந்த மெத்தை லேட்டக்ஸ் அல்லது செயற்கை பொருட்கள் இல்லாததால், இது காலப்போக்கில் உங்கள் உடலின் வடிவத்திற்கு ஏற்ப மாறிவிடுகிறது என்றும், இது மெமரி ஃபோம் அல்ல என்றாலும், உங்களை “நினைவில் வைத்திருக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
