காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை–சாலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன் (36). ஈச்சர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு  நந்தினி (29) என்பவருடன்  12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதியருக்கு 9 மற்றும் 7 வயதுடைய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக மனைவி நந்தினியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கங்காதரன், அடிக்கடி அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை கங்காதரன் குடிபோதையில் வீட்டிற்கு வந்து, மீண்டும் மனைவியுடன் வாய்த்தகராறு செய்து கொண்டார். தகராறு தீவிரமடைந்து கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. அதில் கோபம் அடைந்த  கங்காதரன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, நந்தினியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த நந்தினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் கிடைத்ததும் மணிமங்கலம் காவல்துறையினர் விரைந்து வந்து, நந்தினியின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், கங்காதரனை கைது செய்து, மணிமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.