கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம், கன்னி கிராமத்தை சேர்ந்த பீரப்பா மர்மமான சூழலில் 7 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்திருந்தார். அப்போது அவரது மனைவி சாந்தாபாய், கணவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறி உறவினர்களையும், கிராம மக்களையும் நம்ப வைத்திருந்தார்.

ஆனால் பீரப்பாவின் மரணத்துக்குப் பின்னால் கொடூரமான சதி ஒன்று மறைந்திருந்தது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சாந்தாபாய், அதே கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை அறிந்த பீரப்பா, கள்ளத் தொடர்பை கைவிடும்படி மனைவியிடம் கண்டித்ததால் ஆத்திரமடைந்த சாந்தாபாய், கணவரை கொல்ல  திட்டமிட்டு கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக விசாரணையில் வெளிப்பட்டது.

கொலைக்குப் பின் கூலிப்படைக்கு சாந்தாபாய் பணம் தராததால், அவர்கள் அடிக்கடி தொலைபேசியில் அழைத்து கேட்டதாகவும், அவர்களுக்குள் நடந்த சில உரையாடல்கள் ஆடியோவாக பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் போலீசார் கூறினர். அந்த ஆடியோக்கள் சிலரிடம் கசிந்து சமூக வலைதளங்களில் வைரலானது.

ஆடியோ வெளியானதை அடுத்து, பீரப்பாவின் குடும்பத்தினர் கலபுரகி போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் சாந்தாபாய் குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் போலீசார் சாந்தாபாயை கைது செய்தனர். மேலும் கொலைக்காக ஏவப்பட்ட கூலிப்படையினரான மகேஷ், சுரேஷ், சித்து, சங்கர் ஆகிய நால்வரையும் போலீசார் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 7 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வெளிச்சத்துக்கு வந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.