தெலுங்கானா, கம்மம் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பிரபாகர் தனது மனைவி சாய் வாணியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தகவல். இதனால் மனமுடைந்த சாய் வாணி, குழந்தைகளுடன் பிரிந்து தனியாக வாடகை வீட்டில் வசித்து, அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், குடும்பம் மீண்டும் சேர வேண்டும் என பிரபாகர் பலமுறை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவருடன் செல்ல மறுத்ததார் சாய் வாணி. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சாய் வாணியின் வீட்டிற்கு வந்த பிரபாகர், மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அங்கிருந்த கோடாரியால் தாக்கி சாய் வாணியை தரையில் தள்ளி, பின்னர் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சாய் வாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்களின் மகள் தந்தையை தடுக்க முயன்றபோது, அவளையும் பிரபாகர் கத்தியால் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். இதில் அவரது கை விரல்கள் துண்டாகியதுடன், கால்கள் மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக அரச மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், சாய் வாணியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி, பிரபாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
