டெல்லியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன், ஆசிரியர்களின் தொடர்ச்சியான மனரீதியான துன்புறுத்தல் காரணமாகத் தாங்க முடியாத மன அழுத்தத்திற்கு ஆளாகி, கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் ராஜேந்திரா பிளேஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேடையிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவன், நாடகக் குழுவின் நிகழ்வுக்காகப் பள்ளிக்குச் சென்ற நிலையில், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். மாணவன் விட்டுச் சென்ற உருக்கமான தற்கொலைக் கடிதத்தில், சில ஆசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களின் தொடர்ச்சியான கண்டிப்பும், அவமானப்படுத்துதலுமே தற்கொலைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தன்னைப்போல் வேறு எந்தக் குழந்தையும் இந்தத் துயரத்தைச் சந்திக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட அந்த மாணவன் தனது கடிதத்தில், பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டதுடன், தனது உறுப்புகளைத் தானம் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக, தனது தாயிடம் “நான் உங்கள் மனதை பலமுறை உடைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், கடைசியாக ஒருமுறை நான் இதைச் செய்யப் போகிறேன்,” என்றும் சகோதரனிடம் அன்புடன் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
தொடர்ந்து வகுப்புகள் மற்றும் நாடகப் பயிற்சிகளில் சிறுசிறு தவறுகளுக்காக ஆசிரியர்கள் கடுமையாகக் கண்டித்து, அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியதால் மனமுடைந்து போனதாக, மாணவனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
மகனுக்கு விரைவில் தேர்வு வரவிருந்ததாலும், பள்ளி மதிப்பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் தான் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தேர்வு முடிந்தபின் வேறு பள்ளியில் சேர்ப்பதாக உறுதி அளித்திருந்ததாகவும் தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
