தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த மகாலட்சுமி (29) என்பவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்த நிலையில், நான்கு மாதங்களுக்கு முன் கணவரிடம் சொல்லாமல் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மகாலட்சுமி தனது தாய் வீடான தருமபுரிக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், நவம்பர் 15ஆம் தேதி வெங்கடேஷ், அரூரில் இருந்த மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்றுவிட்டு, இன்று காலை மீண்டும் அரூருக்குத் திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு வந்ததும் கணவன்-மனைவி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க முயன்ற மகாலட்சுமியின் பாட்டி லட்சுமி (70), சமாதானம் செய்ய முடியாமல், தன் மகள் பூங்கொடியை (மகாலட்சுமியின் தாய்) அழைப்பதற்காகப் பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், ஆத்திரமடைந்த வெங்கடேஷ் வீட்டிலிருந்த கத்தியால் மகாலட்சுமியின் கழுத்து மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திரும்பி வந்த பாட்டி லட்சுமி, பேத்தியின் உடலைப் பார்த்து கதறியுள்ளார். இதுகுறித்து அரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.