சாலையில் நடந்த ஒரு பயங்கரமான விபத்து தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பேருந்துக்கும் இருசக்கர வாகனத்திற்கும் இடையில் ஏற்பட்ட இந்த மோதலில், அந்த இளைஞரின் தலை சக்கரங்களுக்கு அடியில் சிக்கிய நிலையில், நொடிப்பொழுதில்   அவரது உயிர் காப்பாற்றப்பட்ட ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. நாம் அடிக்கடி சாலை விபத்துகள் குறித்த செய்திகளைக் கேட்டாலும், சில சம்பவங்கள் மிகவும் பயங்கரமானதாக அமைந்து நம்மை நடுங்க வைத்துவிடும்.

 

ஒரு சில விநாடிகள் கவனக்குறைவு எப்படிப் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் என்பதை இந்த வீடியோ விளக்குகிறது. காணொளியில், பேருந்து ஒன்று வளைவில் மெதுவாகத் திரும்பும் அதே திசையில், இருசக்கர வாகனம் ஓட்டி ஒருவர் பயணிப்பதைக் காணலாம். பேருந்து திரும்பும்போது, அந்த இளைஞர் திடீரென சமநிலையை இழந்து, வாகனத்திலிருந்து சறுக்கி விழுந்து, பேருந்தின் பின் சக்கரத்தின் மிக அருகில் வந்துவிடுகிறார். அடுத்த சில விநாடிகளில், பேருந்தின் கனமான பின் சக்கரம் அவரது தலையை நெருங்கிச் செல்கிறது. அந்த நேரத்தில் அவர் ஹெல்மெட் அணிந்திருந்தது தான் அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.

பேருந்தின் சக்கரம் ஹெல்மெட் மீது ஏறி, அதைக் கவ்விப் பிடித்துக்கொண்டதை வீடியோ தெளிவாகக் காட்டுகிறது. ஏதோ தவறு நிகழ்ந்ததை உணர்ந்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை பின்னால் எடுத்ததால், சக்கரத்தின் பிடியிலிருந்து விடுபட்ட இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உடனடியாகச் சாலையில் இருந்த மக்கள் விரைந்து வந்து, அதிர்ச்சியில் இருந்த அவரை எழுப்பி உதவி செய்தனர். இந்தச் சம்பவம், “தலைக்கவசம் உயிர்க்கவசம்” என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.