தமிழகம் முழுவதும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ‘அன்புச்சோலை’ என்ற பெயரில் 25 பகல்நேர முதியோர் பராமரிப்பு மையங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் திறந்து வைத்தார். இதில், வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே சேனூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அன்புச்சோலை முதியோர் பராமரிப்பு மையமும் அடங்கும். தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இந்த மையங்கள், வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும்.
இங்கு முதியோர்கள் பாதுகாக்கப்பட்டு, அவர்களுக்கு இயன்முறை மருத்துவ சேவைகள், யோகா, பொழுதுபோக்கு அம்சங்கள், நூலகம் உள்ளிட்ட பல சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், தினமும் மதிய உணவும், மாலையில் தேநீரும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அன்புச்சோலை மையங்களின் முக்கிய நோக்கமாக, முதியோருக்கு வழங்கப்படும் உடற்பயிற்சிகள், பொழுதுபோக்கு நிகழ்வுகள், திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள் மூலம் அவர்களது மனமும், உடலும் சுறுசுறுப்புடன் இருக்கச் செய்தல் மற்றும் அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு சமூக உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவை உள்ளன.
மேலும், ஆண், பெண் இருவரும் வேலை பார்க்கும் குடும்பங்களின் மூத்த உறுப்பினர்கள் பாதுகாப்பாகப் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்வதும் இதன் முக்கிய குறிக்கோளாகும். இந்நிலையில், முதல்வர் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, சேனூர் அன்புச்சோலை மையத்தில் மாவட்ட ஆட்சியர் வி.ஆர். சுப்புலட்சுமி, எம்.பி. டி.எம். கதிர்ஆனந்த் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. அமுலு விஜயன், காட்பாடி ஒன்றியக்குழுத் தலைவர் வே. வேல்முருகன் உள்ளிட்ட பல உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் பங்கேற்றனர்.
