நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளராகப் பதவி வகிக்கும் ஆதவ் அர்ஜுனா குறித்து, அவரது மைத்துனரான சார்லஸ் மார்ட்டின் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாட்டரி மார்ட்டினின் மகன் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனருமான சார்லஸ் மார்ட்டின், “ஜான் ஆரோக்கியசாமி என்பவருடன் சேர்ந்து கொண்டு, விஜய்யைத் தனியாக நிற்க வைத்துத் தோற்கடிக்கவே ஆதவ் அர்ஜுனாவை அனுப்பி வைத்திருக்கிறார்கள்” என்று நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெக-வில் மிகவும் முக்கியமான நபராகக் கருதப்படும் ஒருவரே இவ்வாறு சதி செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசியல் களத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஆதவ் அர்ஜுனாவின் இந்தச் செயல் திமுகவின் ஆளாக இருப்பதற்கு வாய்ப்பிருப்பதாகவும், அதன்மூலம் தவெக-வை ‘டேமேஜ்’ (சேதப்படுத்துவது) செய்வதே இவர்களின் திட்டம் என்றும் சார்லஸ் மார்ட்டின் பேசியுள்ளார். அவர் இந்த வியூகத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ல் அமைத்த மூன்றாவது அணி வியூகத்துடன் ஒப்பிட்டுள்ளார்.
அதாவது, தவெகவை தனி அணியாக நிறுத்துவதன் மூலம் எதிரணிக்குக் கிடைக்கும் வாக்குகள் சிதறி, திமுக வெற்றி பெறும் சூழலை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று சார்லஸ் மார்ட்டின் குறிப்பிட்டுள்ளார். ஆதவ் அர்ஜுனா முதலில் திமுக-விற்காக வேலை செய்ததாகவும், பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் (விசிக) இணைந்து செயல்பட்டு அங்கிருந்தும் சர்ச்சையால் வெளியேற்றப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா மீதான தனிப்பட்ட முரண்பாடு குறித்துப் பேசிய சார்லஸ் மார்ட்டின், “எங்கள் குடும்பத்திற்குள் வந்ததும், முதலில் வியாபாரத்தைத் தன்வசமாக்க நினைத்தார். அங்குதான் எனக்கு முரண்பாடு வந்தது” என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர்தான் தமக்கும் தன் தந்தை லாட்டரி மார்ட்டினுக்கும் இடையில் பாகுபாட்டை ஏற்படுத்தி இரண்டு ஆண்டுகள் தள்ளியிருக்கும் நிலை ஏற்பட்டது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கட்சியை மட்டுமே கைப்பற்றும் நோக்குடன் ஆலோசனைகள் வழங்குவது, தலைவர்களை மீறிச் செயல்படுவது போன்ற ‘சரித்திரப் பதிவேடு குற்றவாளி போல’ ஆதவ் அர்ஜுனா நடந்து கொள்வதாக சார்லஸ் மார்ட்டின் விமர்சித்துள்ளார். அவர் கடைசியாகப் பேசியவற்றைக் கவனித்தால், திமுக-வை டேமேஜ் செய்ததைவிட, தவெக-வை டேமேஜ் செய்ததுதான் அதிகம் என்றும் சார்லஸ் மார்ட்டின் கூறியிருப்பது, 2026 தேர்தலில் தவெக தோல்வியடைவது உறுதி என்ற ரீதியில் ஒரு கருத்தை உருவாக்கியுள்ளது.
