பெங்களூரு இந்திரா நகர் பகுதியில், ஒரு பெண் தனது காதலருடன் சென்று கொண்டிருந்தபோது, மதியம் சுமார் 3 மணியளவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அவர்களைப் பார்த்து கத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. ஆரம்பத்தில் அவர்கள் புறக்கணித்துச் சென்றபோதும், அந்த ஆட்டோ ஓட்டுநர் நெருங்கி வந்து, அந்தப் பெண்ணின் ஆடையைத் சுட்டிக் காட்டி ஆபாசமான வார்த்தைகளால் கத்தத் தொடங்கியுள்ளார். அதிர்ச்சியில் உறைந்துபோன அப்பெண்ணால் பதிலளிக்க முடியாதபோது, அவரது காதலர், “அவர் என்ன அணிய விரும்புகிறாரோ அதை அணிவார், உனக்கு என்ன?” என்று அமைதியாக பதிலளித்துள்ளார்.
நிலைமை மோசமாக, அந்த ஓட்டுநர், “இப்படிப்பட்ட ஆடைகளை அணிந்தால், மக்கள் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்வார்கள். நானே அவரைப் பாலியல் வன்கொடுமை செய்வேன்” என்று கொடுமையான மிரட்டலை விடுத்துள்ளார். உடனடியாக அப்பெண்ணின் காதலர் நகைச்சுவையாக பதிலளித்து நிலைமையைக் கட்டுப்படுத்தியவுடன், ஆட்டோ ஓட்டுநர் திட்டிவிட்டுச் சென்றுவிட்டார். இந்தக் கொடூரமான அனுபவத்தை அப்பெண் ரெடிட் சமூக வலைதளத்தில் பகிர்ந்து, மற்ற பெண்களுக்கு, குறிப்பாகத் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பழுத்த வெள்ளைத் தலைமுடி கொண்ட அந்த ஆட்டோ ஓட்டுநரின் முழு எண்ணைப் பதிவு செய்யத் தவறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
