உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 21 வயது மாணவர் ஒருவர், விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராம்பூரின் பன்வர்கா கிராமத்தைச் சேர்ந்த முகமது ஆனை (21) என்ற அந்த மாணவர், ராவத்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹித்காரி நகரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கிப் படித்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று, அவருடன் அறையில் தங்கியிருந்த நண்பர், தொழுகைக்குச் செல்ல வருமாறு அழைத்தபோது, மாணவர் மறுத்துள்ளார்.

தொழுகை முடிந்து வந்து அறையின் கதவைத் தட்டியபோது, அது உள்ளே பூட்டப்பட்டிருந்தது. தகவலறிந்த போலீஸார் தடயவியல் நிபுணர்களுடன் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்றபோது, முகமது ஆனந்த் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். மாணவரின் சடலத்திற்கு அருகில் இருந்து கடிதம் ஒன்றை மீட்டுள்ள போலீஸார், அதில் “அம்மா, அப்பா… என்னை மன்னித்து விடுங்கள்.

நான் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறேன். உங்கள் கனவுகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. எனது மரணத்திற்கு நான் மட்டுமே பொறுப்பு” என்று உருக்கமாக எழுதியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து ராவத்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.