சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் பாண்டிகுமார். வெளிநாட்டில் வேலைபார்க்கும் இவரின் மனைவி மகேஸ்வரி (35), தனது எதிர்காலத் தேவைக்காக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு, இடங்களை வாங்கி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆவுடபொய்கை அருகே உள்ள சாய் பாபா காலனி பகுதியில், மகேஸ்வரி தனது சொகுசு காரில் இடம் பார்க்கச் சென்றவர், தைலமர காட்டுப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
மகேஸ்வரியின் தந்தை மற்றும் உறவினர்கள் தேடிச் சென்றபோது, மகள் பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த குன்றக்குடி காவல்துறையினர், மகேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காகக் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். கொலை நடந்த இடத்திலிருந்து தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளைச் சேகரித்தனர். தேவகோட்டை டி.எஸ்.பி. பொறுப்பு கௌதம் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படைப் போலீஸார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீஸாரின் விசாரணையில், மகேஸ்வரியைக் கொன்றது காரைக்குடி லெட்சுமி நகரைச் சேர்ந்த சசி என்கிற சசிக்குமார் என்பது தெரியவந்தது. திருமணம் ஆகாத இவன், மகேஸ்வரிக்கு ஓட்டுநர் பணியாளராக அவ்வப்போது சென்று வந்ததுடன், அவருக்கு கார் ஓட்டப் பழக்கியும் வந்துள்ளார். இந்த நெருங்கிய பழக்கத்தின் காரணமாக மகேஸ்வரியிடம் பணம் கடனாகப் பெற்ற சசிக்குமார், அதைத் திருப்பிக் கொடுக்காததால், கணவரிடம் கூறிவிடுவேன் என மகேஸ்வரி மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சசிக்குமார், நண்பரின் இடம் உள்ளது, அதை வாங்கி விற்றால் லாபம் கிடைக்கும் எனக் கூறி மகேஸ்வரியை ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று, கல்லால் தாக்கிப் படுகொலை செய்து, அவர் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, சசிக்குமாரைக் கைது செய்த போலீஸார், அவர் திருடிச் சென்ற சுமார் 13 பவுன் நகைகளை அவன் வீட்டிலிருந்து பறிமுதல் செய்தனர். சசிக்குமார் வெளிநாடுகளில் வேலைபார்ப்பவர்களின் வீடுகளில் உள்ள பெண்களிடம் பழகி, பணம் பறிக்கும் பழக்கம் கொண்டவர் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
