தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள தெரு நாய்களின் அச்சுறுத்தல் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று மேலும் கூடுதல் மற்றும் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், ரயில் நிலையங்கள், பள்ளிகளுக்கு அருகே என அனைத்துப் பொது இடங்களிலும் தெரு நாய்கள் நுழையாதவாறு அதிகாரிகள் வேலி அமைத்து அவற்றைத் தடுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தெரு நாய்களுக்குக் கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்திய பிறகு, அவற்றை மீண்டும் பிடித்த இடத்திலேயே விடக் கூடாது என்றும், அவற்றுக்கு முறையான தங்குமிடத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதில், மாநில அரசுகள் உரிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததால், தமிழகம் உட்படப் பல மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் நவம்பர் 3-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த புதிய உத்தரவுகளைக் கட்டாயம் பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அதிகாரிகளே தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த உத்தரவுகள் முறையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.