உம்ரா வழிபாட்டின் போது மக்கா புனித பள்ளிவாசல் அருகே சவூதி போலீஸார் ஒரு பெண்ணையும் எகிப்து நாட்டு யாத்திரிகரையும் தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, உலகம் முழுவதும் முஸ்லிம் சமூகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

59 விநாடிகள் நீளமான அந்த வீடியோவில், பாதுகாப்பு பணியாளர்கள் இஹ்ராம் உடை அணிந்த ஆண், பெண் யாத்திரிகர்களை கடுமையாக தள்ளிய காட்சிகள் பதிவாகியுள்ளன. புனித இடத்தில் இத்தகைய நடத்தை நடந்தது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் கோபம் வெளியிட்டு, சவூதி மற்றும் எகிப்து அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

“இஸ்லாத்தின் இரக்கம், மரியாதை என்ற கொள்கைக்கு எதிராக இத்தகைய நடத்தை உள்ளது,” என நெட்டிசன்கள் குற்றம் சாட்டினர். சிலர், “புனித ஹஜ், உம்ரா நேரங்களில் இத்தகைய அவமானகரமான சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது வருத்தமளிக்கிறது” என்றும் கூறினர். மற்றொருவர், “இது மனிதநேயமற்ற செயல், இவ்வாறு பெண்களை இழுத்துச் செல்லும் காட்சிகள் புனித மக்காவில் நடப்பது மிகவும் அவமானம்” என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து, ஹஜ் மற்றும் உம்ரா பாதுகாப்புப் பிரிவு சிறப்பு படை விளக்கம் அளித்துள்ளது. வீடியோவில் இடம்பெற்ற நபர் “மச்ஜித் அல் ஹராமின் விதிமுறைகளை மீறியதால்” கைது செய்யப்பட்டதாகவும், சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பும் கடந்த மார்ச் மாதத்தில் மதீனாவில் உள்ள நபி பள்ளிவாசலில் நடந்த ஒரே மாதிரியான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது மக்காவில் நடந்துள்ள இந்த புதிய சம்பவம், புனித தலங்களில் யாத்திரிகர்களின் பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.