பெங்களூருவின் பாகலூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 31) அன்று ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. செல்லப்பிராணிகளைப் பராமரிக்கும் பணியில் இருந்த புஷ்பலதா என்ற வீட்டுப் பணிப்பெண், ‘கூஃபி’ என்ற நாய்க்குட்டியை மிகக் கொடூரமாகக் கொன்றுள்ளார். நாயை நடைபயிற்சிக்காக லிஃப்ட்டில் (Lift) அழைத்துச் சென்றபோது, லிஃப்ட்டுக்குள்ளேயே அதன் கழுத்துப் பட்டியைப் (Leash) பிடித்துத் தரையில் பலமுறை வேகமாக அடித்து நொறுக்கி இந்தப் பயங்கரச் செயலைச் செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் நடந்தபோது, அந்தப் பணிப்பெண் தனது முதலாளியான ராஷி பூஜாரியின் வீட்டில் தங்கி உணவு பெற்று வந்துள்ளார், மேலும் நாயைப் பராமரிக்கச் சம்பளமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ​நாய்க்குட்டியைத் தரையில் அடித்துக் கொன்ற பிறகு, புஷ்பலதா நாய்க்குட்டி தவறி விழுந்துவிட்டதாக ஒரு பொய்க் கதையைக் கூறியுள்ளார். ஆனால், நாயின் உரிமையாளரான ராஷி பூஜாரிக்கு சந்தேகம் ஏற்படவே, அவர் சிசிடிவி காட்சிகளைச் சோதித்துப் பார்த்தார்.

அப்போதுதான், அந்தப் பணிப்பெண் நாயை அடித்தும், இறந்த நாயின் உடலை அதன் கழுத்துப் பட்டியைப் பிடித்து வெளியே இழுத்துச் சென்ற கொடூரக் காட்சியும் வெளிச்சத்துக்கு வந்தது. இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் ஆத்திரத்தையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில், செல்லப்பிராணியின் உரிமையாளர் ராஷி பூஜாரி, பாகலூர் காவல் நிலையத்தில் புஷ்பலதா மீது புகார் அளித்தார்.

அதன்படி, பாகலூர் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தக் கொடூரச் செயல் குறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் தங்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்பு புஷ்பலதாவிடம் எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை என்று நாயின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.