ஆந்திரப் பிரதேசத்தின் கோனசீமா மாவட்டம், சி.எச்.குன்னே பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆதிலட்சுமி என்ற பாட்டி, கணவர் மற்றும் மகன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், மருமகள் ஸ்ரீதேவி, பேரன், பேத்தியுடன் வாழ்ந்து வந்தார்.

ஸ்ரீதேவி தனது மாமியாரை கண்ணுக்குக் கண்ணாகக் காப்பாற்றி வந்தார். நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் ஆதிலட்சுமி காலமானார்.

இறுதிச் சடங்குக்கு உற்றார் உறவினர்கள் யாரும் இல்லாததால், மருமகள் ஸ்ரீதேவி கிராம மக்களின் உதவியுடன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, மாமியாருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

ஆதிலட்சுமியின் உடலை இடுகாட்டுக்கு தோளில் தூக்கிச் சென்ற ஸ்ரீதேவி, கொள்ளிக்குடம் உடைத்து, சடலத்திற்கு தானே கொள்ளி வைத்தார்.

இந்த நெகிழ்ச்சி காட்சியைப் பார்த்த கிராம மக்கள் கண்கலங்கினர். மாமியார்-மருமகள் உறவு பெரும்பாலும் மோதலாகவே பேசப்படும் இன்றைய காலத்தில், மருமகள் மாமியாருக்கு இறுதிச் சடங்கு செய்த இந்தச் சம்பவம் அனைவரையும் உருக்கமாக்கியது. இது உண்மையான குடும்பப் பாசத்தின் உதாரணமாகப் பாராட்டப்படுகிறது.